சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
2023ஆம் ஆண்டு ஓய்வு பெற இருக்கும் இவரை தற்போது மேகாலயா உயர் நீதி மன்றத்திற்கு மாற்ற உச்ச நீதி மன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
75 நீதிமன்றங்களோடு 'சார்டர்ட் ஹைகோர்ட்' என்ற பெருமை கொண்ட சென்னை உயர் நீதி மன்றத்தில் இருந்து 3 நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்ஜிப் பானர்ஜி மாற்றப் பரிந்துரைக்கப்பட்டது வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனுவை மறுபரிசீலனை செய்யக்கோரி ஏற்கெனவே 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதி மன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வருகிற நவம்பர் 15அன்று(நாளை) வழக்கறிஞர்கள் சிலர் அமைதிப் போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.
எதன் அடிப்படையில் இடமாற்றம்
இடற்கிடையில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மூத்த வழக்கறிஞர்கள், பி.எஸ்.ராமன், அரவிந்த் பாண்டியன், நளினி சிதம்பரம், என்.ஆர். இளங்கோ உள்ளிட்ட 31 பேர் தற்போது உச்ச நீதி மன்ற கொலீஜியத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில், 'நீதிபதி இடமாற்றம் என்பது பொது நலன் மற்றும் நீதித்துறை நிர்வாக நலன் கருதி மட்டுமே இருக்க வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதி மன்றம் தீர்ப்பு தந்த நிலையில், சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றம் எதன் அடிப்படையில் நடைபெறுகிறது என்பது தெரியவில்லை', எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 2 ஆண்டுகளாவது சென்னையில் சஞ்ஜிப் பானர்ஜி பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஸ்டாலின்