சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நிரந்தரப் பணியாளர்களைத் தவிர, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை ஒப்பந்ததாரர் பிடித்தம் செய்தது போக, நானூறு ரூபாய்க்கும் குறைவானத் தொகை வழங்கப்படுகிறது.
இதனை உயர்த்தி வழங்கக்கோரியும், தனியார் ஒப்பந்தத்தில் விடாமல் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக பணி வழங்கக் கோரியும் மாநகராட்சி ஆணையருக்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஒப்பந்த துப்புரவுப்பணியாளர்கள் ஈடுபட்டனர். மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்களை, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அனுமதிக்காமல் நுழைவு வாயிலுக்கு வெளியே நிற்க வைத்து வரிசையாக மனுக்களை அலுவலர்கள் பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஊழியர்களில் சிலர், " 2017ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண்: 2D-GO-62 ன் படி அனைத்துத் துறை தினக்கூலி பணியாளர்களுக்கும் மாதச் சம்பளமாக 16,725 ரூபாய் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்கு நிர்வாகம் செவி சாய்க்க மறுக்கிறது.
இன்று எங்கள் நிர்வாகிகளிடம் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு ஆணையர் உத்தரவுப்படி மனுக்களை பெறுகின்றனர். ஆனால், நடைமுறைப்படுத்துவார்களா என்பது தெரியவில்லை. அடிப்படை சம்பளம் கூட கிடைக்காமல் இந்தத் துப்புரவு பணிகளை மேற்கொண்டுவரும் எங்களின் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: அயோத்தி வழக்கு: 18 மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!