சென்னை: உலகத் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாமை மா. சுப்பிரமணியன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் தொடங்கிவைத்தார். இவ்விழாவில் பேசிய அவர், "நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது.
நேற்று ஒரேநாளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பேசியதில் பலர் மன அழுத்தத்தில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. விபத்துகளைவிட தற்கொலையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் உள்ளன.
தமிழ்நாட்டில் சாணி பவுடர் தயாரிக்கத் தடை விதிக்கப்படும். பால்டாயில், எலி மருந்து போன்ற பொருள்களை நிபந்தனைகளோடு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மைத் துறை உதவியுடன் மனநல மருத்துவமனையில் தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்" என்றார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவமனையாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 500-க்கும் மேற்பட்டோர் கூடிவருகின்றனர்.
தளர்வுகள் அளித்துள்ளதால் கரோனா இல்லை என நினைக்க வேண்டாம். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். சென்னையில் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பில்லை.
அரசின் கையிருப்பில் 20 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. வரும் 19ஆம் தேதி திட்டமிட்டபடி தடுப்பூசி முகாம் நடைபெறும். அதில் 10 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'இடஒதுக்கீடு முதல் அனைத்திலும் பெரியாரின் கொள்கைப்படியே நடக்கும் அதிமுக'