சென்னை: பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் என்றாலே, கொண்டாட்டத்தை தாண்டி சில சிக்கல்களும் உருவாகக் கூடும். அதில் முதல் மற்றும் முக்கிய சிக்கலே பயணம் தான். இதில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு உள்ளிட்டவைகள் அடங்கும். சாதாரண நாட்களில் ஏற்படும் நெரிசலைக் காட்டிலும் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் ஏற்படும் நெரிசலால் பொதுமக்கள் பெருமளவில் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, தொடர் விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை தினத்தையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், "இன்று (அக். 21) முதல் திங்கள் வரை, 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
மேலும், இந்த விடுமுறை தினங்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களும் நடைபெறுகின்றன. இதனால் பணிக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் குடியேறியவர்கள், சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். அவ்வாறு செல்வோர் பேருந்து, ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்தை பயன்படுத்துவதால், அனைவரும் ஒரே நேரத்தில் கூடுவார்கள்.
இதனால் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நெரிசலைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசார் வாகனங்களையும், பயணிகளையும் ஒழுங்குபடுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் உறுதியாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார். மேலும், கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சட்ட ஒழுங்கு நிலை குறித்தும், உயர் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: நீட் விலக்குக்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!