சென்னை: அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தைப் போன்று செம்மரக்கடத்தல் கும்பலின் நிழல் உலக தலைவராக திகழ்ந்தவர் சென்னையில் கைதாகியுள்ளார். ஆந்திராவிலிருந்து சென்னை வரை நீண்ட சாம்ராஜ்யம் கொண்டிருந்த வெங்கடேசன், துப்பாக்கி காட்டி மிரட்டல், நில அபகரிப்பு என பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். அரசியல் செல்வாக்குடன் வலம் வந்த வெங்கடேசன் போலீசில் சிக்கியது எப்படி என்பது குறித்து காணலாம்.
மண்ணடி பகுதியை சேர்ந்தவர் சுல்தான். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் சில நாட்களுக்கு முன்பு இவரிடம் 10 பேர் பாடியநல்லூரில் உள்ள தங்களது 23 சென்ட் நிலத்தினை விற்பனை செய்து தரும்படி கொடுத்துள்ளனர். இதனையடுத்து சுல்தான் அந்த இடத்தினை விற்பனை செய்வதற்காக அங்கு சென்றபோது வேறு கும்பலின் தலையீடு ஏற்பட்டுள்ளது.
பாஜக முன்னாள் ஓபிசி அணி மாநில செயலாளர் வெங்கடேசன், அவரது ஓட்டுநர், பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நரேஷ், நரேஷ் தந்தை பிரதீப் ஆகியோர் இது தங்களது நிலம் தங்களுடையது என கூறி பத்திரத்தினை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுல்தான் இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் வெங்டேசன் தலைமையிலான கும்பல், போலியாக பத்திரம் பதிவு செய்து ஏமாற்றியது உறுதியாகியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஆவடி காவல் ஆணையராக மத்திய குற்றப்பிரிவு நில மோசடி பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரைப் பெற்றுக் கொண்ட நில மோசடி ஆய்வாளர் லாரன்ஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் உளவுத்துறையுடன் கைகோர்த்த சதியில் ஐந்தாவது குற்றவாளி கைது!
மேலும் இது குறித்து உயர்நீதிமன்ற ஆணை மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ரெட்ஹில்ஸ் பகுதியில் தலைமறைவாக இருந்த செம்மரக்கட்டை கடத்தல் மன்னன் வெங்கடேஷ், நரேஷ் குமார், நரேஷ் தந்தை பிரதீப் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மற்றொரு எப்ஐஆரில் போலி ஆவணங்கள் தயாரித்து, ரூபாய் 18 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, கே.ஆர்.வெங்கடேசன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். A1-ல் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளும், A2-ல் இருந்து ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கே.ஆர்.வெங்கடேசன் மீது ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 40-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்கும், தமிழ்நாட்டில் கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்று அரசியல் செல்வாக்கு, பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு காவல்துறையின் கைகளில் சட்டப்பூர்வமான பாடம் புகட்டப்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும் எனத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “உசாரய்யா உசாரு”... மதுரையில் உலா வரும் 'குரங்கு குல்லா' திருடர்கள்!