சென்னை: தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் இராமசாமி கூறும்போது, ’’தமிழ்நாட்டில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதன் அடிப்படையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இளங்கலை, முதுகலை சேர்த்து 156 தலைப்புகளில் பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடத்திட்டங்கள் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன. 75 சதவீதம் பாடத்திட்டங்களை உயர் கல்வி மன்றம் தயாரித்து பரிந்துரை அளித்திருக்கிறது. 25 சதவீதம் பாடத்திட்டங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் உள்ளூர் நிலைமைக்கு ஏற்ப பாடப்பகுதிகளை சேர்த்துக் கொள்ளலாம். பாடத்திட்டங்களில் மாற்றங்கள் வேண்டாம் என்று நினைப்பவர்கள், 100 சதவீதம் உயர் கல்வி மன்றம் அளித்த பாடத்திட்டங்களைப் பின்பற்றலாம்.
மேலும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் அரசு பாடத்திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறைகள் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும். மேலும் பாடப்பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் மாற்றம் செய்துகொண்டு 75 சதவீதத்தை கற்பிக்க வேண்டும்.
25 சதவீதம் பாடத்துடன் கூடுதலாகவும் பாடங்களைக் கற்பிக்கலாம். புதியப் பாடத்திட்டத்தின் படி இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர்கள் ஏற்கனவே 2 பருவத்திற்கு தமிழ் படித்த நிலையில், 4 பருவத்திற்கும் தமிழ் பாடம் படிக்க வேண்டும். மாணவர்களைத் திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
’நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் மாணவர்களுக்குத் திறனை வளர்ப்பதற்கான பயிற்சி அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளங்கலை மாணவர்களுக்கு கணினி அறிவியல் அறிவும், மொழித் திறன் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மேலும் பாடத்திட்டங்கள் அனைத்தும் பல்கலைக் கழகங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் மாற்றம் செய்து புத்தகமாக எழுதித் தர உள்ளனர்’’ எனத் தெரிவித்தாா்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்படும் பாடங்கள் மற்றப் பல்கலைக் கழகத்தின் பாடத்திற்கு இணையாக இருக்காத நிலை இனிமேல் ஏற்படாது. ஒரு மாணவர் பட்டப்படிப்பின் இடையிலேயே வேறு ஊரில் உள்ள கல்லூரிக்கும் சென்று சேர்ந்து படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்து சிறப்பு மின்தேக்கிகளை தயாரிக்கும் சென்னை ஐஐடி!