சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிச.28 ஆம் தேதி காலை காலமானார். இவரின் உயிரிழப்பு தமிழ்நாடெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் நேற்று வைக்கப்பட்டது. அங்கு திரண்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள், திரைத்துறையினர், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது நேற்று (டிச.29) உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடையே பேசிய சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் ஆர்ஆர் தமிழ் செல்வன், 'புரட்சி கலைஞர் விஜகாந்த்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், உலக தமிழர்களுக்கும் ஒன்றை மட்டும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கேப்டன் விஜயகாந்த் புதைக்கப்படவில்லை, அவர் விதைக்கப்பட்டுள்ளார் என்பதுதான் நிச்சயமான உண்மை. அவரை வாழ்த்த வந்தவர்கள் அன்னதான பிரபு, தர்மர், துணிச்சல்க்காரர் என்றெல்லாம் சொன்னால் மட்டும் போதாது, அவரின் தொண்டர்கள் அவரை பின்பற்றி வாழ வேண்டும்.
ஒரு கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லும் வகையில், தன்னப்பிக்கையோடு 100 கலர் சினிமா படங்களில் நடித்த பெருமைக்குரியவரை இன்று இழந்திருக்கிறோம். இத்தகைய சிறப்புமிக்க தர்ம பிரபுவின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு அரசின் பாடப்புத்தங்களில் இடம்பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். இதுமட்டுமில்லாமல், நடிகர் சங்கக் கடனை அடைத்து வைப்பு நிதி வைத்துச் சென்ற இவரின் பெயரை நடிகர் சங்கத்திற்கு வைக்கவேண்டும், அதன் வளாகத்தின் விஜயகாந்தின் சிலையை நிறுவ வேண்டும் என்றார்.
குறிப்பாக, அனைத்து தலைவர்களுக்கு சென்னை மெரினாவில் சிலை உள்ளதைப்போல, விஜயகாந்திற்கும் மெரினாவில் சிலை வைக்க வேண்டும் என்றும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் இங்கு வந்து அஞ்சலி செலுத்துகின்ற நிலையில், இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றாக இணைந்து இன்று தந்துள்ள இதே ஆதரவோடு பாடப்புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாறு இடம்பெறவும், விஜயகாந்திற்கு சிலை வைக்கவும் துணையாக இருக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இது ஒரு நல்ல மனிதருக்கு வந்த கூட்டம்.. - நடிகை குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி!