சென்னை: தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு குட்கா போதைப்பொருள்களைப் பயன்படுத்த மாநில அரசு தடைவிதித்தது. ஆனால் தடையையும் மீறி தமிழ்நாட்டில் குட்கா, புகையிலைப் பொருள்களின் விற்பனை அதிகளவில் நடைபெற்றுவந்தது. இதனால் மரணிப்போரின் எண்ணிக்கை, குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் இருந்துவந்தது.
இதனை முற்றிலுமாகத் தடுக்கவும், புகை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 'டிரைவ் அகைன்ஸ்ட் பேண்டு டொபக்கோ புரோடக்ட்ஸ் (Drive Against banned Tobacco Products)' என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
ஒரு மாதத்தில் 203 பேர் கைது
இதனடிப்படையில், தனிப்படை காவல் துறையினர் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வோர், கடத்துவோர், பதுக்கிவைப்போர் ஆகியோரைக் கண்டறிந்து கைதுசெய்யும் பணியில் இறங்கினர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குட்கா பொருள்கள் கடத்தியவர், பதுக்கியவர், விற்பனை செய்தவர் என மொத்தம் 203 பேர் கைதுசெய்யப்பட்டு 172 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளதாகச் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து 10 ஆயிரத்து 511 கிலோ குட்கா, 840 கிலோ மாவா, 12 இருசக்கர வாகனங்கள், இரண்டு ஆட்டோக்கள், ஐந்து லோடு ஆட்டோக்கள் என 21 வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்போர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க : காவலருக்குப் 'பளார்' - கத்தியைக் காட்டி மிரட்டிய லாரி ஓட்டுநர் கைது