சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவங்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது.
கடந்த 1962 முதல் 1982ஆம் ஆண்டுகளில் கோயில் அறங்காவலர்களாக இருந்த பொன்னுசாமி, ரத்தினவேல், பாலசுந்தரம் ஆகியோர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, கோவில் நிலங்களில் அறநிலையத் துறை அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் கட்டக்கூடாது. ஆனால், காரணீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், அந்த நிலங்களில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் எழுப்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிலங்களில் வாடகைதாரர்கள் பலர் இருந்தபோதும், 79 பேர் செலுத்தும் வாடகை விவரங்களை மட்டுமே அறநிலையத் துறை வழங்கியது. இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத அறநிலையத் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க நடவடிககை எடுக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளையபெருமாள் ஆஜராகி வாதிட்டார். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஸ்ரீஜெயந்தி தெரிவித்தார்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 2ஆவது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் உயிரிழப்பு!