சென்னை: மும்பையில் கடல் வழியாக பயங்கரவாதிகள் நுழைந்து மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். அதன்பிறகு இந்தியாவின் கடல் எல்லைகளை தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு நடைபெறும் ஒத்திகையில் கடலோரப் பாதுகாப்பு குழும காவல்துறையினர், பயங்கரவாதிகள் போல வேடமிட்டு கடல் வழியாக வந்து நகர்ப்புற பகுதிக்குள் நுழைந்து வருவார்கள். அவர்களை காவல் துறையினர் கண்காணித்து மடக்கிப்பிடிக்க வேண்டும். இந்த சாகர் கவச் (கடல் கவசம்) பாதுகாப்பு ஒத்திகை, இன்று (ஜூன் 28) மற்றும் நாளை (ஜூன் 29) என மொத்தம் 48 மணி நேரம் நடைபெறுகிறது.
இதில் இந்திய கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழுமம், தொழில் பாதுகாப்புப் படை, மத்திய மாநில உளவுப் பிரிவு, தமிழ்நாடு காவல் துறையினர் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சென்னையில் 10,000க்கும் மேற்பட்ட காவலர்கள் கடலோர எல்லைக்குட்பட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினா கடற்கரை காமராஜர் சாலை, துறைமுகம் சாலை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் உள்ளிட்டப் பல இடங்களில் பேரிகார்டு அமைத்து வாகனங்களை காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த ஒத்திகையில் கடல் வழியாக பயங்கரவாதிகள் நகரத்திற்குள் ஊடுருவினால், எந்த இடத்தில் குளறுபடி நடந்துள்ளது என ஆய்வுசெய்து அதை சீர்செய்து கொள்வோம் என காவல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே கடல் வழியாக பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு நுழைய முயன்ற 4 பேரை கடலோர காவல் படை மற்றும் காவல் துறையினர் பிடித்துள்ளனர். அதேபோல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை தகர்ப்பதற்காக மீனவர் படகில் பயங்கரவாதிகள்போல் வேடமிட்டு வந்தவர்களை கடலோர காவல்படை துரத்திப் பிடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்கு வருமாறு மிரட்டல் - துணை நடிகை புகார்