முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சாதிக் பாட்ஷா. இவர் கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார். 2ஜி வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாதிக் பாட்ஷா கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி மூலம் தனக்கு மிரட்டல்கள் வருவதாக ரெஹாபானு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் தன் காரின் கண்ணாடியை உடைத்தும், தன்னை தாக்க முயற்சி செய்துள்ளதாகவும் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அதன் பின்னர் சாதிக் பாட்ஷாவின் மனைவி ரெஹாபானு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, தன் கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சாதிக் பாட்ஷாவின் தொடர்பில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா உட்பட அனைவரிடமும் அதிகாரிகள் மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், தன் கணவர் அரசியல் உள்நோக்கத்துடன் தான் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு வரும் கொலை மிரட்டல் விடுத்த நபருக்கும், சாதிக் பாட்ஷாவின் மரணத்திற்கும் சம்பந்தம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.