தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை விசாரணைக்காக காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவரின் உயிரிழப்புக்கு திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கரோனா ஒரு கொடிய வைரஸ் நோய் என்கிறார்கள். இதில் மாட்டியவர்கள் கூட பலர் உயிருடன் திரும்பி வருகிறார்கள். ஆனால், சாத்தான்குளம் பிரச்சனையை கேள்விப்படும்போது, இப்படிப்பட்ட காவலர்களிடம் மாட்டிக் கொண்டால் என்ன ஆவது? நினைத்துப் பார்க்கும் போதே ஈரக்குலை நடுங்குகிறது.
கரோனா ஊரடங்கு உத்தரவின் போது எத்தனை காவலர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக வேலை செய்தார்கள். அதை நாம் மறக்கவும், மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட காவல் துறையில் இப்படிப்பட்ட கொடுமைக்காரர்கள் இருந்துள்ளனர். இந்த சாத்தான்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
அதுவும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.