சென்னை: சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைப் போல், தமிழ்நாடு பள்ளிகளுக்கான கட்டமைப்புகளை கிராமப்புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி குழந்தைகளின் திறனை மேம்படுத்துதல், படைப்பாற்றலை மேம்படுத்துதல், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக மாதம் ஒருமுறை குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிடல் அரசுப்பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அப்படி திரையிடப்படும் அந்தப் படத்தின் மீது சிறந்த விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் இறுதிசெய்யப்பட்டு வெற்றி பெறுபவர்கள், வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்லப்படுவர் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனுடைய ஒருபகுதியாக சென்னை சூளைமேட்டிலுள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஈரானிய திரைப்படமான ’சில்ட்ரன் ஆப் ஹெவன்’ படத்தின் ரீமேக்கான அக்கா குருவி படம் அப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குத் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும், பள்ளியில் வகுப்பறைக்குச் சென்ற அவர், மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ”தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தை நான் வரவேற்கிறேன். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டங்கள், அரசுப் பள்ளிகளின் மீது கவனம் எடுப்பது என்பது வரவேற்கத்தக்கது. விசுவல் வழியாக படிப்புபோல், திரையிடப்படுவதும் சிறப்பானது. மிகப்பெரிய முன்னெடுப்பாக இருக்கிறது. அரசுப்பள்ளி என்பதால் நான் கலந்துகொண்டேன்.
இன்று திரையிடப்பட்ட படத்தில், சிறுவயதில் கஷ்டப்படும் அக்காவும் தம்பியும் உயர்ந்த இடத்திற்கு வருகின்றனர் என்பது தான் கதை. இக்காட்சியினைப் பார்க்கும்போது குழந்தைகள் கைத்தட்டினார்கள். இது உணர்வுப்பூர்வமானது. மக்களுக்கு செய்யக்கூடிய பணிகளில் மிகமுக்கியமானது. நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் மிக முக்கியம். அதை சிறப்பாக செய்கின்றனர்.
சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைப்போல் பள்ளிகளுக்கான கட்டமைப்புகளை தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அந்த மாணவர்களுக்கும் கல்வி கிடைக்கும். திரைப்படங்களை சிலவற்றிற்காக ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிடமுடியாது. உளவியல் ரீதியாக படங்கள் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனது குரு விக்ரமனின் மகனை நாயகனாக்கும் கே.எஸ்.ரவிக்குமார்...!