இது தொடர்பாக அவர் அனுப்பிய உத்தரவில் கூறியுள்ளதாவது:
"போக்குவரத்துத் துறையிடம் பள்ளி வாகனம் என்பதற்கான அனுமதியை பெற்றவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தரச் சான்றிதழ் உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். வாகன காப்பீடு செய்ய வேண்டும். காப்பீடு உரிய காலத்தில் புதுப்பிக்கப்படுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
வாகனத்தின் முன்னும் பின்னும் பள்ளி வாகனம் என்று பெரிய எழுத்தில் தெளிவாக எழுத வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தை இயக்கினால், பள்ளிப் பணிக்காக மட்டும் என்று வாகனத்தின் முன்னும் பின்னும் எழுத வேண்டும். முதல் உதவிப்பெட்டி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். தீயணைப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த கருவி உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும்.
வாகனத்தில் பள்ளியின் தொலைபேசி எண் எழுத வேண்டும். வாகனத்தில் பாதுகாப்பு கிரில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தனித்து தெரிவதற்காக மஞ்சள் வண்ணம் பூச வேண்டும். புத்தகப் பையினை பாதுகாப்பாக வைப்பதற்கு, இருக்கையின் அடியில் போதிய இடவசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவசரகால வழி இருக்க வேண்டும். ஏறும் படிக்கட்டுகளின் உயரம் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
வாகனத்திற்கும் ஒரு தகுதியான உதவியாளர் நியமிக்க வேண்டும். உதவியாளர் இல்லாமல் வாகனத்தினை இயக்கக் கூடாது. பள்ளி அளவிலான போக்குவரத்துக் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு மாதம் ஒருமுறை கூட்டப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது.
பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகளை அவர்களது இருப்பிடத்தில் இறக்கிவிடும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே அங்கிருந்து வாகனத்தை இயக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் பள்ளியை ஒட்டியுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்திக் குழந்தைகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. உதவியாளர் நியமிக்கப்படவில்லை எனில் அதுகுறித்து போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கும் கல்வித் துறை அலுவலர்களுக்கும் புகார் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.