தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றுதல், ஆர்சி புத்தகத்தின் நகல் பெறுதல் போன்ற பல்வேறு விதமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் பல்வேறு பணிகள் இணையதளம் வழியாக மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து போன்ற அனைத்து பணிகளும் இணையதளத்தில் செய்யக்கூடிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் ஒருபகுதியாக ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் நபர் புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்திற்குள் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல இடங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்களில், ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் கார்ட் வடிவிலான ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அலுவலகங்கள் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதால் பிற அலுவலகங்களிலிருந்து என்ஓசி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது மொபைல் எண், ஆதார் எண், இமெயில் முகவரியை தவறாமல் குறிப்பிட வேண்டும் என விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.