சென்னை: இதுகுறித்து வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் சங்கத்தின் செயலாளர் எம்.முகமது பசீர் கூறியதாவது," நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. அரசு தளர்வுகள் கொடுத்து பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜவுளி கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் 98 விழுக்காடு சிறிய, பெரிய அளவிலான மொத்த விலை ஜவுளி கடைகளே உள்ளன. இதனால் பொதுமக்கள் இங்கு வந்து செல்வது குறைவு தான். எனவே ஜவுளி கடைகளை திறக்க அரசு அனுமதியளிக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
அதன்பின் சங்கத்தின் மூத்த தலைவர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து கூறியதாவது, "கரோனா பரவலால் 48 நாட்களுக்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பொருளாதார பிரச்சனை, மன உளைச்சலிலும் இருந்து வருகிறோம். கடந்த 1 1/2 வருடங்களாக போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறோம். தமிழ்நாடு மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்கும் முதலமைச்சர் ஜவுளி கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இவரைத் தொடர்ந்து சங்க நிர்வாகி சரவணன் கூறியதாவது, " தற்போது கடைகள் மூடப்பட்டுள்ளதால் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறோம். இதன் பிறகும் கடை மூடும் நிலை தொடர்ந்தால் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.