சென்னை: தாம்பரத்தில் ரவுடி நெடுங்குன்றம் சூர்யா தலைமையில் ஒரு கோஷ்டியும், ரவுடி சீசிங் ராஜா தலைமையில் ஒரு கோஷ்டியும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது. இதனால் அடிக்கடி இரு கோஷ்டிக்கும் மோதல் ஏற்படுகிறது. போலீசாரும் அவ்வப்போது கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
2019ஆம் ஆண்டு ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளியான ராகுல் என்பவரது தம்பி பப்லுவை நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகள் கொலை செய்தனர். இந்த வழக்கின் குற்றவாளிகளை பழி தீர்ப்பதற்காக சீசிங் ராஜாவின் கூட்டாளியான ரவுடி விவேக் ராஜ் பயங்கர ஆயுதங்களுடன் நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த விவேக் ராஜ் தாம்பரம், சிட்லபாக்கம், சேலையூர், பீர்க்கன்கரணை, ஓட்டேரி ஆகிய காவல் நிலையத்தில் 11 வழக்குகளில் தேடப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி, கஞ்சா கடத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே விவேக் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று ரவுடி விவேக் ராஜை மடக்கி பிடித்தனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க விவேக் முயற்சித்தபோது போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அந்த நேர்த்தில் விவேக்குக்கு பள்ளத்தில் விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டது. அதோடு அவனுடன் இருந்த மற்றொரு கூட்டாளி பள்ளிக்கரணை சேர்ந்த விஷால் என்பவரும் கைது செய்யப்பட்டார். அதன்பின் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: போதையில் இருவர் மோதல் - கத்தியால் ஒருவரைஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியீடு