கஞ்சா வழக்கில் தொடர்புடைய ரவுடி சங்கரை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை செய்தனர். நியூ ஆவடி சாலையில் ரவுடி சங்கர் காவலரை தாக்கி தப்ப முயன்றபோது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ரவுடி சங்கர் உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக தெரிவித்தனர்.
அந்த அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன்படி, சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று (செப்.02) என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக என்கவுன்ட்டரில் தொடர்புடைய காவலர்கள் ஏழு பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
சங்கர் என்கவுன்ட்டர் வழக்கில் கீழ்பாக்கம் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர் முபராக், தலைமை காவலர் ஜெயபிரகாஷ், தலைமை காவலர் முருகன், தலைமை காவலர் வடிவேல் ஆகிய ஏழு பேரும் செப்டம்பர் 7ஆம் தேதி காலை 10 மணி அளவில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு ஆஜராக கோரி சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க:ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு: சிபிசிஐடி விசாரணை