சென்னை: மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர், டொக்கன் ராஜா(40). இவர் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சிடி மணியின் கூட்டாளி ஆவார். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 25 வழக்குகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த இவருக்கு பாஜக பட்டியல் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று வெளியே வந்த டொக்கன் ராஜா, அதன் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். தலைமறைவாக இருந்து வந்த டொக்கன் ராஜாவை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்தபோது ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினரின் விசாரணைக்குப் பின் டொக்கன் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த டொக்கன் ராஜா மீண்டும் குற்ற செயல்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்து வெளிவந்த டொக்கன் ராஜா மயிலாப்பூர் பகுதிக்குச் செல்லாமல் மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் டொக்கன் ராஜாவின் சகோதரர் மகள், பார் கவுன்சிலில் பதிவு செய்து நாளை முதல் நீதிமன்றத்திற்குச் செல்ல இருந்ததால், அவரை வாழ்த்தி வழி அனுப்புவதற்காக மதுராந்தகத்திலிருந்து மயிலாப்பூர் பல்லக்கு மாநகருக்கு டொக்கன் ராஜா வந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 9) இரவு பல்லக்கு மாநகரில் உள்ள அவரின் வீட்டிலிருந்து வெளியே வந்த டொக்கன் ராஜாவை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து ஓட ஓட விரட்டி டொக்கன் ராஜாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. தகவல் அறிந்த மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் மயிலாப்பூர் போலீசார், இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2003ஆம் ஆண்டு கதிரவன் என்பவரை கொலை செய்த வழக்கில் டொக்கன் ராஜா முக்கிய குற்றவாளி என்பதும், அந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக டொக்கன் ராஜாவை அவரது மகன்கள் ஆட்களை வைத்து கொலை செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடந்த 2001ஆம் ஆண்டு மயிலாப்பூரில் துரைக்கண்னு என்பவரை டொக்கன் ராஜா கும்பல் கொலை செய்த நிலையில், அதற்கு பதிலடியாக டொக்கன் ராஜா கும்பலை சேர்ந்த பாலாஜி என்பவரை துரைக்கண்ணு கோஷ்டியினர் கடந்த 2003ஆம் ஆண்டு கொலை செய்தனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த டொக்கன் ராஜா கும்பல், பாலாஜியின் இறுதிச் சடங்கு நடைபெறுவதற்குள் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய வேண்டும் என ரவுடி டொக்கன் ராஜா தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் கொலை வெறித் தாக்குதல் நடத்தியபோது, எந்த வித வழக்கிலும் தொடர்பில்லாத கறிக்கடைக்காரர் கதிரவனை டொக்கன் ராஜா தரப்பினர் கொலை செய்துவிட்டு ஏரியாவில் நாங்கள் தான் தாதா என திரிந்தனர்.
கறிக்கடைக்காரர் கதிரவனை டொக்கன் ராஜா கோஷ்டியினர் கொலை செய்த போது அவருக்கு ஒன்றரை வயதில் நரேஷ் குமார் என்ற மகனும், இரண்டாவது முறையாக மனைவி கர்ப்பமாகவும் இருந்துள்ளார். கதிரவனின் இறுதி சடங்குகள் முடிந்த பின் குடும்பத்துடன் துரைப்பாக்கத்தில் குடியேறிய நிலையில், பின்னர் இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு மகேஷ்குமார் என பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் இரு பிள்ளைகளும் தற்போது இளைஞர்களாக ஆகி விட்ட நிலையில், தனது தந்தை கதிரவனை கொலை செய்த டொக்கன் ராஜாவை பழி தீர்த்தே ஆக வேண்டுமென நரேஷ் குமார் மற்றும் மகேஷ் குமார் ஆகியோர் உரிய நேரம் பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ரவுடி டொக்கன் ராஜா சில தினங்களாக, பல்லக்கு மாநகரில் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் இருவரும் தனது நண்பர்களுடன் இணைந்து டொக்கன் ராஜாவை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 20 ஆண்டுகள் கழித்து, தனது தந்தையைக் கொலை செய்தவரை, அவரது மகன்கள் பழிதீர்த்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய கொலை குற்றவாளிகளை நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதேபோல 2001ஆம் ஆண்டு தோட்டம் சேகர் என்பவரை ரவுடி சிவக்குமார் கொலை செய்திருந்த நிலையில், தோட்டம் சேகரின் மகன்கள் 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ஆம் ஆண்டு ரவுடி சிவக்குமாரை மாம்பலத்தில் வைத்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ரவுடிகளுக்கு இடமில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறிய நிலையில் அடுத்த நாளே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவச் சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த பெண் கைது!