விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ரவுடி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டன் சென்னை அண்ணா நகர் பகுதியில் கடந்த வாரம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் நீதிபதி தனஞ்ஜெயன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் உடலை பார்வையிட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து நேற்று மாலை என்கவுன்ட்டர் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த நீதிபதி தனஞ்செயன் என்கவுன்ட்டர் நடந்த வீட்டை சோதனை செய்தார்.
மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏழு வீடுகளிலும் உள்ள அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது, மணிகண்டன் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன? அவரிடம் ஏதாவது பேசி உள்ளீர்களா? என்கவுன்ட்டர் சம்பவம் நடக்கும்போது துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதா? காவல் துறையினர் வந்ததை பார்த்தீர்களா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதி முன்வைத்தார்.
இந்த விசாரணை அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும் காணொலி மூலமாகவும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, என்கவுன்ட்டர் நடந்த வீட்டை சோதனை செய்யுமாறு உதவி ஆணையர் கண்ணன் கூறியபோது, வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர், நீதிபதி தனஞ்செயன் கிளம்பிச் சென்றவுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து, அட்டை பெட்டிகளில் பொருட்களை எடுத்துச் சென்றனர். அது நாட்டு வெடிகுண்டுகளா என கேட்டபோது அதனை காவல் துறையினர் உறுதி செய்ய மறுத்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கொரட்டூரில் ரவுடி மணிகண்டன் என்கவுன்ட்டர்!