கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், சென்னை எழும்பூர் பூபதி நகரைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர், எழும்பூர் காவல் ஆணையர் சாலையில் ஆவின் பால் பூத் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த (மே.28) ஆம் தேதி வழக்கம் போல கடைக்குச் சென்று விற்பனைக்காக வந்த ஆவின் பால் பாக்கெட்டுக்கள் அடங்கிய ஐந்து பிளாஸ்டிக் ட்ரேயை வாங்கி, கடை முன்பு வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர், மீண்டும் கடைக்குத் திரும்பினார். அப்போது, கடை முன் வைக்கப்பட்டியிருந்த இரண்டு பிளாஸ்டிக் ட்ரேக்களில் இருந்த 39 ஆவின் பால் பாக்கெட்டுக்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து சரத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி வினோத் அலெக்சாண்டர் (எ) குதிரை சிவா (35) பால் பாக்கெட்டுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வினோத்தை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.1,000 பணம், 2 பிளாஸ்டிக் ட்ரேக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வினோத் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து வினோத் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையில், அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.