சென்னை: சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி, மாது என்கின்ற மாதவன் (52). இவர் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் கூட்டாளி ஆவார். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி பட்டினம்பாக்கம் அருகே ரவுடி ஆற்காடு சுரேஷை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். அப்போது, அவருடன் இருந்த ரவுடி மாதவனையும், அந்த கும்பல் கொலை செய்ய முயன்றதில், பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவுடி மாதவன், சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினார்.
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, ராயப்பேட்டை கஜடிபேகம் தெருவில் மாதவன், தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, திடீரென கத்தியை எடுத்து ரவுடி மாதவனை கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இதனை சுதாரித்துக் கொண்ட மாதவன், ஓடிச் சென்று அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து, கதவை மூடிக் கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல், வீட்டில் புகுந்து இரண்டு கைகளை வெட்டி துண்டித்ததுடன், தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் மாதவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், உயிரிழந்த மாதவனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், ரவுடி ஆற்காடு சுரேஷை கொலை செய்த அதே கும்பல்தான் மாதவனையும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக நிர்வாகி கொலை மிரட்டல்: வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் குழந்தைகளுடன் வீதி வீதியாக அலைந்து வரும் பெற்றோர்..