சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியப் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களில் ரவுடிகள் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.
அப்புகாரின் அடிப்படையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில், ரவுடி ஒழிப்புப் படை டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது.
குறிப்பாக ஏ+, ஏ, பி என்ற வகையில் ரவுடிகளைப் பிரித்து கைது செய்யும் பணியில் தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே 42-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டிருந்த படப்பை குணா, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து படப்பை குணாவின் கூட்டாளிகளான சேட்டு, பிரபு ஆகியோர் தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அச்சத்தில் ரவுடிகள்...
இந்நிலையில் இன்று (பிப். 7) காஞ்சிபுரத்தில் 60-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய தினேஷ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இவர் மறைந்த ரவுடியான ஸ்ரீதரின் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரவுடி தினேஷை நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்ட 45 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட அதி தீவிர குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், முக்கிய ரவுடிகளான படப்பை குணா, பிரபு, சிவா, மணிமாறன், தினேஷ், தியாகு உட்பட ஏ+,ஏ வகை ரவுடிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கக்கூடிய ரவுடிகளைக் கைது செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர் கூறினர்.
ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டவுடன் பல ரவுடிகள் பயந்து சரணடையும் செயல்களில் ஈடுபட்டு வருவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் பழகியவரை கர்ப்பமாக்கிய காவல்துறை புள்ளி - நடவடிக்கை எடுப்பார்களா?