சென்னை திருமங்கலம் பெரியார் தெருவில் ரவுடிகள் தீபாவளியன்று பொது இடத்தில் மது குடித்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மது அருந்தி அட்டகாசம் செய்த ரவுடி கும்பலை எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதிக்கு வந்த ரவுடிகள் புகார் அளித்தது யார் என கேட்டு தெருவில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை சேதப்படுத்தியும், வீட்டின் ஜன்னலை உடைக்கும் செயலிலும் ஈடுப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை ஆய்வு செய்த திருமங்கலம் காவல் துறையினர் குடிப்போதையில் அராஜகம் செய்த ரவுடி கும்பலைச் சேர்ந்த தீபக் என்ற நபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள 6 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.