சென்னை: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி ராக்கெட் ராஜாவை கடந்த அக்.7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூலை மாதம் மஞ்சங்குளத்தைச்சேர்ந்த சாமிதுரை என்பவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதே வழக்கில் ஏற்கெனவே, 10 பேர் கைது செய்யப்பட்டனர். ராக்கெட் ராஜா தரப்பிற்கும், சாமிதுரை தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சாதி மோதலில், சாமிதுரை கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கடந்த அக்.11ஆம் தேதி ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்து நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து, ராக்கெட் ராஜாவை கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ராக்கெட் ராஜா மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தொடர்பான விசாரணைக்காக இன்று (நவ.8) ராக்கெட் ராஜாவை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அறிவுரைக் கழகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வந்தனர். அப்போது, ஓய்வுபெற்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதற்கு முன்னதாக, ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் அறிவுரைக் கழகத்தில் தாக்கல் செய்தனர்.
ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டது செல்லுமா? செல்லாதா? என ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை மேற்கொண்டார். குண்டர் சட்டம் போடும் அளவிற்கு பெரிய அளவு குற்றம்செய்யவில்லை எனவும்; பொய்யான வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ராக்கெட் ராஜா தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராக்கெட் ராஜா மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் செல்லுமா? செல்லாதா? என அறிவுரைக் கழகம் விரைவில் அறிவிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராக்கெட் ராஜாவை மீண்டும் கோவை சிறைக்கு அழைத்துச் சென்றனர். ராக்கெட் ராஜாவை அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்துவதை அறிந்த பனங்காட்டுப் படை கட்சி தொண்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.
இதையும் படிங்க: நூதன முறையில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று மோசடி ...பாதிக்கப்பட்டவர்கள் புகார்..