சென்னை: இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி வீழிநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சென்னை ஐஐடி வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்கப்பட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து 4 வது ஆண்டாக ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளதாகவும், பொறியியல் உயர்கல்வி நிறுவன பிரிவில் மட்டும் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது. தேசிய தரவரிசைப் பட்டியலின் தரவரிசை மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இந்திய அளவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள தேசிய உயர்கல்வித் நிறுவனங்களுக்கான தரவரிசை, வருங்காலத்தில் உலகளாவிய தரவரிசையாக உருவெடுக்கும். கற்பித்தல், ஆராய்ச்சி, வேலை வாய்ப்பு போன்ற காரணிகள் வைத்து இந்த தரவரிசை கொடுக்கப்படுகிறது. தரமான கல்வியை வழங்குவது முக்கிய காரணியாக உள்ளது.
பள்ளி, பாலிடெக்னிக் போன்றவற்றிற்கும் இது போன்ற தரவரிசை பட்டியல் வெளியிடலாம் என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தரவரிசை பட்டியலை அரசு மிகவும் வெளிப்படையாக வெளியிடுகின்றனர். இந்த பட்டியலினால் சர்வதேச அளவில் தரவரிசை பட்டியலும் விரைவில் வரலாம். சென்னை ஐஐடியில் ஆன்லைன் கல்வி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கரோனா காலக்கட்டத்தில் மிகவும் பயனுள்ள முறையில் மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெற்றனர். 1400 படிப்புகளுக்கான ஆன் லைன் கல்வியை சென்னை ஐஐடி வழங்கி வருகிறது.
ஆன்லைன் படிப்புகளுக்கான தேவை, முக்கியத்துவம் உலகளவில் உருவாகி வருவதாகவும், ஏற்கனவே ஆன்லைன் படிப்புகளில் சிறந்துவிளங்கும் சென்னை ஐ.ஐ.டி.,க்கு இந்த வாய்ப்பு மூலம் மேலும் தேவை அதிகரிக்கும். இந்த ஆண்டில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி., 200 வகையான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை ( Pattern Right ) கோரி விண்ணப்பித்தது. அவற்றில் 170 கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.
பிற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் தங்கள் யோசனைகளுக்கு செயல்வடிவம் தந்து காப்புரிமை பெற முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் இந்தியா மேலும் வளர்ச்சியடையும். மேலும் யோசனைகளை ஆராயும் போது அதற்கான காப்புரிமை பெறவதற்கான வாய்ப்புகள் , சந்தைத் தேவை, சர்வதேச அளவில் அதன் பயன்பாடு ஆகியவற்றை கண்டறிவதற்கான மென்பொருளை பயன்படுத்துகிறோம். அந்த மென்பொருளை பிற நிறுவனங்களும் பயன்படுத்தி ஆராய்ச்சியினை அதிகரிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கான தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகளை உருவாக்க தனி குழு அமைத்து கவனம் செலுத்தி வருகிறோம். வருங்காலத்தில் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தரமான கல்வி நிறுவனங்களை பெற்றோர்கள் தேர்வு செய்து தங்களின் குழந்தைகளை சேர்க்க முடியும். அப்படி செய்தால் அவை மேலும் முன்னேற்றமடையும்.
Out of the box உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக, ஐ.ஐ.டி.யால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுடனும் சென்னை ஐ.ஐ.டி இணைந்து செயல்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில், மனித கழிவை ரோபோ மூலம் அகற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் கருவி கண்டுபிடித்து அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியால் உள்நாட்டிலேயே 5 ஜி தொழில் நுட்பம் தகவல் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 6 ஜி தகவல் தொழில் நுட்பம் வரும் போது, செயற்கை கோள் மூலம் தான் செயல்படுத்த முடியும். எனவே அதிகளவில் செயற்கை கோள்களை அனுப்பும் ராக்கெட் தொழிற்சாலையை சென்னை ஐஐடி கீழ் இயங்கும் Agnikul நிறுவனம் தொடங்கியுள்ளது. 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராக்கெட் தயாரிக்க உள்ளோம்.
இதன்மூலம் 72 மணி நேரத்தில் ராக்கெட் எஞ்சின் தயாரிக்க முடியும். அதற்கான திட்டங்கள் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் தொடங்கபட்டுள்ளது. அரசின் வீட்டு வசதி வாரிய வீடுகளை கட்டுவதற்கு 3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் பயன்படுத்த பட உள்ளது. சுற்று சூழல் தொடர்பான இலக்கை அடைவதற்கு ஆராய்ச்சி மையம் தொடங்க உள்ளோம்.
கழிவு நீர் மறுசுழற்சி திட்டம் சென்னை ஐஐடியில் சிறப்பாக செயல்படுகிறது. இதற்காக சென்னை ஐஐடி வளாகத்தில் 26 கிலோமீட்டர் நீளத்தில் பைப் லைன் போட்டுள்ளோம். 1.5 லட்சம் மில்லியன் நீர் நாள் தோறும் மறு சுழற்சி செய்ய படுகிறது. அதிகப்பட்சமாக 4 லட்சம் மில்லியன் லிட்டர் நீர் மறு சுழற்சி செய்ய முடியும்.
கால நிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு மையம் அமைக்க போகிறோம். இன்னும் 10 வருடத்தில் சுற்றுசூழல் அறிவு கொண்டவருக்கு தான் வேலை வாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும். சென்னை ஐஐடியில் படித்து முடித்து வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் குறைந்து வருகிறார்கள். நிறைய மாணவர்கள் தொழில் நிறுவனம் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர். வருடத்திற்கு 10-20% மாணவர்கள் தான் வெளிநாடு செல்கிறார்கள். விவசாயிகளுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமாக இருக்கிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேட்டூர் அணையில் 16 கண் மதகு வழியாக நீர் திறப்பு