சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் சர்ச் காலனியைச் சேர்ந்தவர் கண்ணன் (70). அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவரது மனைவி ஷியாமளா (63). பிப்ரவரி 16ஆம் தேதி கண்ணன், சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஷியாமளா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது ஷியாமளாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்புவந்துள்ளது, அதில் இந்தியன் வங்கி மேலாளர் விஜயகுமார் என்பவர் பேசுவதாகக் கூறியுள்ளார்.
பின்னர் பிரதமர் புதியதாக வயதானவர்களுக்கு என்று ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்; அதைச் செயல்முறைப்படுத்த வேண்டுமென்றால் உங்களது வங்கிக் கணக்கு அட்டையில் உள்ள எண், ஏடிஎம் கார்டில் உள்ள 16 டிஜிட்டல் எண் ஆகியவற்றைக் கொடுத்தால் மட்டுமே அதைச் செயல்முறைப்படுத்த முடியும் என்று அந்த நபர் ஷியாமளாவிடம் கூறியுள்ளார்.
அரை மணி நேரம் பேசிய பின்பு உங்களது தொலைபேசியில் ஓடிபி எண் வந்திருக்கும் அதைக் கூறுங்கள் என்று அந்த நபர் கேட்டவுடன் ஷியாமளாவும் ஓடிபி நம்பர் கொடுத்துள்ளார். ஓடிபி எண்களைப் பெற்று சில நிமிடத்தில் அடுத்தடுத்து 20 ஆயிரமாக என ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை அந்த அடையாளம் தெரியாத நபர் எடுத்துள்ளார்.
மீதமுள்ள பணத்தையும் எடுக்க அந்த நபர் தொடர்ந்து பேசிய நிலையில், அதன் பின்னர் ஷியாமளாவிற்குச் சந்தேகம் ஏற்பட அக்கம்பக்கத்தினரிடம் கூப்பிடுவதாக மேலாளரிடம் கூறியதும் அந்த நபர் தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டார். பின்னர் ஷியாமளா அக்கம்பக்கத்தினரிடம் இதுபற்றி கேட்டபோதுதான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இந்தியன் வங்கிக்குச் சென்று வங்கி மேலாளரிடம் தெரிவித்தபோது ஒரு மாதத்தில் இதுபோன்று சிட்லப்பாக்கம் பகுதியில் மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட வயதான நபர்கள் பணத்தைப் பறிகொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
![robbery](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-robberyofmoneyfromatmcard-visual-script-7208368_18022021121959_1802f_1613630999_532.jpg)
பின்னர் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு பரங்கிமலையில் உள்ள இணையவழி குற்றத்தடுப்பு காவல் துறையில் புகாரளித்தார். வழக்குப்பதிந்த காவல் துறையினர் தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக கறி விருந்து: மூதாட்டி காதை அறுத்து நகை திருட்டு