சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 17 இடங்களில் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட RMU எனும் 'நவீன வளைய சுற்றுத்தர அமைப்பு' இயந்திரங்களின் செயல்பாட்டை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 10) தொடங்கிவைத்தனர்.
தமிழ்நாட்டில் புதிதாக ஐந்தாயிரத்து 692 RMU என்னும் 'நவீன வளைய சுற்றுத்தர அமைப்பு' இயந்திரங்கள் அமைக்க ஒப்புதல் பெற்ற நிலையில் 1300 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
RMU இயந்திரங்களின் செயல்பாடுகள்
துணை மின் நிலையங்களிலிருந்து வரும் மின்சாரம் RMU இயந்திரங்களின் வழியே மின்மாற்றிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் குறைந்தபட்சம் இரு மின்வழிப்பாதைகளுடன் இந்த இயந்திரங்கள் இணைக்கப்படுவதால் ஒரு மின்வழிப் பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு மின்வழிப் பாதையில் மின்சாரம் செல்லும். மின் தடை ஏற்பட்ட பகுதிக்கு இந்த இயந்திரம் மூலம் மின்சாரம் அனுப்ப முடியும்.
எனவே மின் தடைகளைக் குறைக்கவும் இந்த வளைய சுற்றுத்தர அமைப்புகள் உதவுகின்றன. கட்டுப்பாட்டு அறைகளிலிருந்தே இந்த இயந்திரங்களை இயக்க முடியும் என்பதால் மழைக் காலங்களில் மின் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திரங்களின் செயல்பாட்டைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளரைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த RMU இயந்திரங்களை மாற்றித்தர வேண்டும் என்றும், மழை நாள்களில் பல இடங்களில் RMU இயந்திரங்கள் மழைநீரில் மூழ்கும் நிலை உள்ளதால் அவற்றின் உயரத்தை ஒரு மீட்டர் உயர்த்தித் தர வேண்டும் என்றும் தொகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர்.
அதனை ஏற்று இன்று சேப்பாக்கம் தொகுதியில் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் 27 இயந்திரங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 17 இயந்திரங்களின் செயல்பாடு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள் குறித்து கணக்கெடுத்துள்ளோம். பொங்கல் முடிந்தவுடன் சாலைகள், கால்வாய்கள் சீரமைக்கும் பணி தொடங்கும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: ஹரியானாவில் பள்ளி, கல்லூரிகள் மூடல்