32ஆவது சாலை பாதுகாப்பு மாதம் நேற்றுடன் நிறைவு பெறுவதையொட்டி சென்னை காவல்துறை சார்பில் ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த புத்தகம், காலண்டர், பாடல் ஆகியவற்றை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் அவர் பேசியதாவது, "சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற பெயரில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த மாதம் 17ஆம் தேதி வரை சென்னை முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாலை விபத்துகளை குறைப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாலை விபத்தில் ஒரு உயிர் போனால் 3 சதவிகித தேசிய உற்பத்தி திறன் குறையும்.
சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 54 சதவிகித சாலை விபத்துகள் குறைந்துள்ளன. தமிழ்நாட்டை கண்டு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் சாலை பாதுகாப்பு குறித்து கற்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
குறிப்பாக சென்னையில் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு 80 சதவிகித விபத்துகள் குறைந்துள்ளன. சென்னையில் காவல் துறையினர் அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பில் நிற்பது கடினம். எனவே பொதுமக்களே முன்வந்து சாலை விதிகளை மதித்தால் மட்டுமே சாலை விபத்துகள் நடப்பதை முற்றிலுமாக தடுக்க முடியும். சாலை விபத்துகள் நடைபெறாத நகரமாக சென்னையை மாற்ற விரும்புகிறேன். ஜீரோ வையலேஷன் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சாலை பாதுகாப்பு மாதத்திலும் விபத்துகள் தொடரும் அவலம்' - ஸ்டாலின் ட்வீட்