தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் பலரும் விறுவிறுப்பாகப் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
இதற்கிடையில் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் அனைவரும் அறிந்ததே. சுமார் கடந்த ஆறாண்டு தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இந்தத் தொகுதியைப் பற்றிச் சொல்லாமல் யாருமே இருக்க முடியாது.
ஆர்.கே. நகரில் ஜெயலலிதா
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறை சென்ற பிறகு பதவியிழந்த ஜெயலலிதா விடுதலையானதும் ஆர்.கே. நகர் தொகுதியில் 2015ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்கு முன்பாக அங்குச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ஜெயலலிதாவிற்காக ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலிலும் மறைந்த ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் நின்று 39 ஆயிரத்து 545 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
தீவிரம் காட்டும் திமுக
ஆர்.கே. நகர் தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக ஏழு முறை வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் திமுகவும், காங்கிரசும் தலா இரண்டு முறை வென்றுள்ளன.
மேலும் 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக ஒருமுறைகூட ஆர்.கே. நகரில் வென்றது இல்லை என்பதால், தற்போதைய 2021 தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என திமுக தீவிரம் காட்டிவருகிறது.
டிடிவியும் டெபாசிட் பெறாத திமுகவும்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வென்ற ஜெயலலிதா நான்கு மாதங்களில் உயிரிழந்ததால், 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் தொப்பி சின்னத்தில் டிடிவி தினகரனும், அதிமுக சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். அதில் டிடிவி தினகரன் 40 ஆயிரத்து 707 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இத்தேர்தலில் அதிமுக இரண்டாம் இடத்தைப் பெற்றது. திமுக வேட்பாளர் இந்த இடைத்தேர்தலில் வைப்புத்தொகையைக்கூட பெற முடியவில்லை.
கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை நாள்தோறும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அபாயகரமான முறையில் கடந்துசெல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் அதற்குச் செவிசாய்க்காத நிலையில் தற்போது அரசு உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் ரயில்வே கேட்டைக் கடக்கும் பாதையில் சரியான பாதை இல்லை என்றும், ரயில் பாதையை அருகில் மது விற்பனைக் கடை உள்ளதால் அதனை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தப் பகுதியில் சாலை வசதிகள் சரிவரச் செய்யப்படாத நிலை உள்ளது என்றும், சுகாதார நிலையங்கள் குடியிருப்புப் பகுதியின் அருகில் இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளை, ஆட்சிக்கு வரும் அரசு நிறைவேற்றுமா என்ற சந்தேகத்தில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே. நகரில் யாருக்கு அதிக பலம்
வாக்காளர்கள் எண்ணிக்கை
![வாக்காளர்கள் எண்ணிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11264311_candidate.jpg)
ஆண்கள் - ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 744 பேர்
பெண்கள்- ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 889 பேர்
மூன்றாம் பாலினம் - 105 பேர்
மொத்தம் - இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 738 வாக்காளர்கள்
38% மீனவர்கள்
இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் 38 விழுக்காட்டினர் மீனவர்கள்தான். அதிலும் குறிப்பாக காசிமேடு துறைமுகம் இந்தத் தொகுதியில்தான் வருகிறது.
மேலும் 2000 விசைப்படகுகள், 7000 பைபர் படகுகள் வந்துசெல்லும் காசிமேடு துறைமுக மக்கள்தான் வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கப்போகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
![ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11264311_candidate-name.jpg)
அதிமுக - ஆர்.எஸ். ராஜேஷ்
திமுக - ஜே.ஜே. எபினேசர்
மக்கள் நீதி மய்யம்- பாசில்
நாம் தமிழர் கட்சி- கௌரி சங்கர்
அமமுக - மருத்துவர் காளிதாஸ்