முன்னாள் முதலமைச்சர்ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது தெகுதியான ஆர்.கே.நகருக்கு 2017ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டன.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிகளை அமல்படுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.கே. நகரில் போட்டியிட்ட மருது கணேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு, டிஜிபி, அபிராமபுரம் காவல் நிலையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: டெல்டா விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு