சென்னை: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் காலதாமதப்படுத்தாமல் மக்கள் அனைவரும் தடுப்பூசி (COVID-19 vaccine) செலுத்திக்கொள்ள வேண்டும் எனப் பொதுச் சுகாதாரத் துறை வேண்டுகோள்விடுத்துள்ளது.
இது குறித்து பொதுச் சுகாதாரத் துறை, "கடந்த மூன்று மாதங்களில் (ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்) மொத்தம் 2011 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் ஆயிரத்து 675 பேர் அதாவது 84 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கணக்கெடுப்பு நடத்தப்பட்டது
மேலும், தொழில்நுட்ப ரீதியாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நோயால் உயிரிழப்பு குறித்துக் கணக்கிடப்படுகிறது. அதில், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்பொழுது, கரோனாவில் தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் இறந்துள்ளனர். இதனால் கரோனா தடுப்பூசி செலுத்தாமல் கரோனா தொற்று உறுதிசெய்யப்படுபவர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது.
இடரை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்
இதனால் பொதுமக்கள் இடரை உணர்ந்து விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதனால் காலதாமதப்படுத்தாமல் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது. இதனிடையே, வியாழன், ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களில் தமிழ்நாட்டில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என்றும் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.