சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் திறப்பதில் கால தாமதமானது. மேலும், மாணவர்கள் நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வருகை தராமல் இருந்ததால், மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு அரசுத் தேர்வுத் துறையின் மூலம் வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, முதல் திருப்புதல் தேர்வு கடந்த 9ஆம் தேதிமுதல் 17ஆம் தேதிவரை நடைபெற்றுவருகிறது.
மேலும், அரசுத் தேர்வுத் துறையின் சார்பில் பொதுத் தேர்வினைப் போல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டுமென அறிவுறுத்திருந்தது. இந்நிலையில் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இது குறித்து அரசுத் தேர்வுத் துறை அலுவலர் கூறுகையில், “மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்குத் தயார்படுத்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
அடுத்த மாதமும் 2ஆவது திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நடைபெறும். எனவே பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம். மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. கட்டாயம் இந்தாண்டு பொதுத் தேர்வு நடைபெறும். அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10,12 திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்