இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஏற்கனவே 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியபோதே பொதுநலன் கருதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதைக் கடுமையாக எதிர்த்தன.
இந்நிலையில் தற்போது ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்திருப்பது, தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலைக்காகக் காத்திருக்கும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
தமிழ்நாடு அரசின் தேவையற்ற இந்த அறிவிப்பை பெரும்பாலான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரும்பவில்லை. மேலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் எதையும் 110 விதியின் கீழ் நிறைவேற்றி அறிவிப்பு வெளியிடாத முதலமைச்சர், அரசு ஊழியர்கள் கேட்காத ஒன்றை 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வுக் காலப் பலன்களை அளிப்பதைத் தவிர்ப்பதற்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகப் பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை முற்றிலுமாகப் பறிக்கும் இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அமைப்புக்களின் சார்பில் தனித்தோ அல்லது பிற அமைப்புக்களுடன் இணைந்தோ மார்ச் 3 ஆம் தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் - வெளியானது அறிவிப்பு