சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023 என்ற சட்டத்தை எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றியது. 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் தேவைப்படும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், உட்கட்டமைப்பு ஆகியவற்றிற்காக இச்சட்டத்தின் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்படும்.
ஏற்கனவே நிலம் கையகப்படுத்த மத்திய மாநில அரசுகளில் பல சட்டங்கள் உள்ளன. ஆனால் அந்த சட்டங்களின் அடிப்படையில் நிலத்தைக் கையகப்படுத்த பல்வேறு நிபந்தனைகள், சுற்றுச்சூழல் அனுமதி என்று கால விரயமும் பண விரயமும் ஆகிறது. எனவே தான் இச்சட்டம் என்று அரசு விளக்கம் அளிக்கிறது. அதாவது தனியார் நிறுவனத்துக்கு நிலத்தை வழங்குவதில் எவ்வித தாமதமும் கூடாது என்றும், முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்குச் சாதமாக இத்தகைய சட்டம் இயற்றப்பட்டுள்ளன எனப் போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் நீர்நிலைகள், இதற்கான நீர் பிடிப்பு பகுதிகள் நீர்வழிப் பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும். ஒருவேளை நீர்நிலைகள் அதாவது ஏரி, குளங்கள், குட்டைகள் பாதுகாக்கப்பட்டாலும் அவை அந்நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அந்நீர் மீது உள்ள உரிமை பறிபோகும். மேலும் பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான நிலங்களை அரசு எடுத்துக் கொள்வதால் பொது இடம் என்ற ஒன்றே கிராமங்களில் இருக்காது.
இதையும் படிங்க: "தர்ம ரட்சகராக அவதாரம் எடுக்கும் ஆளுநர்" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
இதனால் கிராமங்களில் பொதுமக்களின் தேவைக்கான நிலம் என்பது கிடைக்காது. தனியாருக்குச் சொந்தமான நிலங்களும் அரசால் எடுத்துக் கொள்ளப்படும். அரசு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்த ஏற்கனவே பல சட்டங்கள் உள்ள நிலையில் இந்த புதிய சட்டம் தேவையில்லை. எனவே நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், மற்றும் சிபிஐ, சிபிஎம் மாநிலத் தலைவர்கள் சண்முகம், குணசேகரன் மற்றும் மாநில பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், "தமிழ்நாடு சிபிஐ, சிபிஎம் விவசாயிகள் சங்கம் இணைந்து விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத்தைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாமல் இருக்கிறது. விவசாயிகளுக்கு இந்தச் சட்டம் பாதகத்தை உருவாக்கும் என்றும் இது கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான எளிமையான திட்டமாகவும் உள்ளது. எனவே இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
கார்ப்ரேட்டுக்கு சாதகமாகத் தமிழக அரசு இரண்டு சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்று இந்த நில ஒருங்கிணைப்பு சட்டம் மற்றொன்று தொழிலாளர்களுக்குக் கட்டுப்பாடு அற்ற வேலை, இதனைத் திரும்பப் பெற்றனர். அதேபோல் நில ஒருங்கிணைப்பு சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றார். ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு போராடியது போல் இதுவும் நீண்ட கால போராட்டமாக இருக்கும், இந்த உலகம் கார்ப்பரேட்டுக்கான உலகமாக இன்று உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியது சட்டப்படி குற்றம்.. உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!