சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள் அதிகாரிகள் அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஊடகங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணியாகும். அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு ஆணையர் பொறுப்பிடங்கள் கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
இதற்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தேடுதல் குழு அமைக்கப்பட்டு அறிக்கையையும் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் இரண்டு முறை புதிய தகவல் ஆணையர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெற்ற நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தரை தேர்வு செய்து பரிந்துரை கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. அந்த பரிந்துரையை ஏற்று ஷகில் அக்தரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
1989-ஆம் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஷகீல் அக்தர் கடந்த நவம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் 1962-ஆம் ஆண்டு பிறந்தவர், முதுநிலை இயற்பியல் படித்தவரான இவர் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு தருமபுரி மாவட்டம் அரூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கியவர். ஷகீல் அக்தர் திமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், ஓய்வு பெறும்போது சிபிசிஐடி டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை கிண்டி ராஜ் பவனில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் நான்கு தகவல் ஆணையர்கள் ஏடிஜிபி தாமரை கண்ணன், ஆர்.பிரியா குமார், டாக்டர் கே.திருமலைமுத்து, டாக்டர் எம்.செல்வராஜ் ஆகியோருக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் இறையன்பு மட்டுமே பங்கேற்றார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது காரணமாக, முதல்வர் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதையும் படிங்க: 'குற்றவியல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர முடியாது' - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்