மின் வாரியத்தின் முன்னாள் உதவி பொறியாளரும், பேக்ட் இண்டியா என்ற அமைப்பின் நிர்வாகியுமான சி. செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில், " வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கடந்த ஜனவரி 18ஆம் தேதி டெண்டர் அறிவித்துள்ளது.
இருபது லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ள இந்த டெண்டர் தன்னிச்சையானது, சட்டவிரோதமானது. தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம், விதிகளுக்கு எதிரானது. விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளன. 2 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள டெண்டர்களுக்கு, 30 நாட்கள் வரை கால அவகாசம் தர வேண்டும் என்று விதி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய தணிக்கை அறிக்கையில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், மும்பை உயர் நீதிமன்றம் இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
நமது நாட்டிலேயே போதுமான அளவு நிலக்கரி உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் மாற்று திட்டங்களான காற்றாலை மின் திட்டம், சோலார் மின் திட்டம் போன்ற திட்டங்கள் உள்ள நிலையில், நிலக்கரி இறக்குமதி செய்வது என்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்.
தற்போது மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ள டெண்டர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதென்றும், பாரா தயா எனர்ஜி என்ற இந்தோனேஷியன் கம்பெனிக்குச் சாதகமாக இந்த டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே நிலக்கரி இறக்குமதி தொடர்பாக, 746.13 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதால், நிலக்கரி விநியோகம் செய்பவர்கள் பற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டதால் 813.68 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பாக, ஏற்கனவே வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த டெண்டருக்குத் தடை விதிக்க வேண்டும், இது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவு, மத்திய ஊழல் கண்காணிப்பு துறை, ஊழல்தடுப்பு துறை ஆகியவை இணைந்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி சத்தி சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (பிப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: உத்தரவு வரும்வரை நிலக்கரி டெண்டரை திறக்கக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்