சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு திருச்சபைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான மனுவில், "சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகளை தொடங்க அரசு அனுமதி பெற வேண்டும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட இந்த விதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்த விதிகளை நீக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 21) நீதிபதிகள் சுந்தர் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "கடந்த 1973ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் 1975ல் ரத்து செய்யப்பட்ட பல பிரிவுகள், புதிய சட்டத்தின் மூலமும், விதிகளின் மூலமும் கொண்டு வரப்பட்டுள்ளன. 1975ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கே மாற்றியது. அப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, 1973ம் ஆண்டு சட்டம் அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என 2012ல் உத்தரவிடப்பட்டது" என வாதாடப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு அரசு தரப்பில், ”உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறுபான்மையில்லாத கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது. 1973ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு, புதிய சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் ஜூன் 15ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.