சென்னை: சட்ட மேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா இன்று (ஏப்ரல் 14) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே, அம்பேத்கரின் உருவச்சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் நடிகர் விஜய் உத்தரவின் படி, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மக்கள் மன்றங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் உள்ள அவரது உருவச்சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் பேரணியாக சென்று மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றதுடன் ஜெய்பீம் என முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் விநியோகிக்கப்பட்டது.
இதேபோல், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சிலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதன் தொடர்ச்சியாக பனையூரில் உள்ள இல்லத்தில் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அவர் ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ள செயல், நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைய எடுத்து வைத்துள்ள அடுத்த அடியாகப் பார்க்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அம்பேத்கரை பாஜகவினர் வாக்கு வங்கியாக பார்க்கின்றனர்: கி.வீரமணி குற்றச்சாட்டு