சென்னை: தீபாவளிக்கு வெடித்த பட்டாசு புகையால் சென்னை இப்பொழுது வரை மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் சராசரியாக 500 AQI என்கிற அபாய அளவுக்கு மேல் பதிவாகி உள்ளது. இன்று (25.10.2022) காலை 8.30 மணி நிலவரப்படி உலகிலேயே அதிகம் காற்று மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லியை பின்னுக்குத் தள்ளி சென்னை முதலிடத்தைப் பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது.
ஒரு நல்ல ஆரோக்கியமான காற்று என்றால் AQI- Air Quality Index 0 - 50AQI வரை இருத்தல் வேண்டும். பொதுவாகத் தென் சென்னையின் AQI 50 - 60AQI வரை இருக்கும். ஆனால் நேற்று இரவு தீபாவளி தினத்தன்று (24.10.2022) சென்னையின் காற்றின் தரம் 786AQI வரை பதிவாகி உள்ளதாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இது ஒருவர் 31 சிகெரட் பிடித்ததற்குச் சமமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
காற்றின் தரம் 300AQI க்கு மேல் சென்றால் அது அபாயகரமான நிலையாகக் கருதப்படுகிறது. 24.10.2022 இரவு முதல் ஆலந்தூர், பெருங்குடி, சவுகார்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, கிண்டி, மணலி, எண்ணூர், கொடுங்கையூர், தி. நகர், பாரிஸ், வண்டலூர், அடையார் உட்படச் சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தரம் யாரும் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அபாயகரமாகச் சென்றுள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை காற்று தரக்குறியீடு அதிகபட்சமாக சவுகார்பேட்டையில் 786AQI ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 563, வளசரவாக்காதில் 545 ஆகவும் பதிவாகி உள்ளது. இரவு 11மணி முதல் 12மணி வரை அளவில் சென்னையின் நுண்துகள் அளவுகள் 950 ug/m3 ஆகப் பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகம் ஆகும்.
தீபாவளி அன்று இரவு 8 மணிக்கு மேல்தான் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்தது, இரவு 8 மணிக்கு மேல் சென்னையின் நான்கு காற்று தரக் கண்காணிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்பதும், இரவு 11மணி முதல் அதிகாலை 4மணி வரை மணலி கண்காணிப்பு நிலையம் மட்டுமே செயல்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல வாகனங்கள் பயன்படுத்தி தொழிற்சாலை இயக்கியபோது இருந்ததை விடத் தீபாவளி நாளன்று சென்னையின் காற்றின் தரம் 10-15 மடங்கு அதிகமாகப் பதிவாகி உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று இரவு வெடித்த பட்டாசு புகை காரணமாக எத்தனை கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டனர், எத்தனை ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், எத்தனை பேர் காற்று மாசின் காரணமாக உயிரிழந்தார்கள் என்கிற பட்டியலை அரசு வெளியிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
சூழலைக் கெடுக்கும் மனித ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தினை தமிழ்ச் சமூகம் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். டெல்லி அரசு பட்டாசுக்கு முழுமையான தடை விதித்ததை போன்று தமிழ்நாடு அரசாங்கமும் பட்டாசு தடையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி: சென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்