சிவில் நீதிபதிகள் தேர்வில், தமிழ் வழியில் சட்டம் படித்த போதும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என வழக்கறிஞர்கள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ் வழியில் படித்து, தமிழில் தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற தகுதியுள்ளதா? தமிழில் பாடம் நடத்தப்படாமல், தமிழில் பல்கலைக் கழக தேர்வு எழுதியவர்கள் இடஒதுக்கீடு பெற உரிமை உள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கார்த்திகேயன், சரவணன் அடங்கிய அமர்வு, கல்லூரி அல்லது பல்கலைக் கழக தேர்வுகளையும், போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதினால் மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமையில்லை என்று கூறினர். மாறாக கல்லூரி படிப்பை தமிழ் வழியில் படித்தார் என கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக் கழக பதிவாளர் சான்றளித்தால் மட்டுமே இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியும் என்று கூறினர்.
தமிழ் வழியில் படித்தவர் என சான்றிதழ் வழங்காத விண்ணப்பதாரர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க:இரண்டு பெண் குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆறு ஆண்டுகள் சிறை !