சென்னை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநில பொதுச்செயலாளர் தாஸ், "மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்கிறோம். அதனை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதுபோல் பொறியியல், வேளாண்மை, கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்து உயர் கல்வியிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட ஐந்தாயிரத்து 68 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 11ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன் பின்னரும் அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை எனில், மாநில அளவில் பொதுக்குழு கூட்டம் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் மீதான வழக்குகளைத் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்