சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகிய வளிமண்டல சுழற்சி காரணமாகக் கடந்த இரு தினங்களாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படைந்துள்ளது.
கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணிகளைச் செய்து வந்தன்ர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்தியக் கடற்படை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியக் கடற்படை: கனமழையால் தென்மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தமிழக அரசு இந்தியக் கடற்படையின் உதவிகளை நாடியது. அந்த வகையில் ராமநாதபுரத்தில் உள்ள பருந்து இந்தியக் கடற்படை நிலையத்திலிருந்து ALH ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு 150 கிலோ வெள்ள நிவாரணப் பொருட்களை இன்று கொண்டு சென்றனர்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக இந்தியக் கடற்படையின் இரண்டு டோர்னியர் விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக இன்று காலை 410 கிலோ எடைகொண்ட நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இரண்டாவது பகுதியாக சுமார் 3.5 டன் எடைகொண்ட நிவாரணப் பொருட்கள் நாளை (டிச.20) தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. முன்னதாக, இன்றே இரண்டு குழுக்களாகத் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக ஒரு குழு மட்டுமே சென்றுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் 10 பேர் கொண்ட இரண்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் (ஐஎன்எஸ் கட்டபொம்மன் மற்றும் சென்னை குழு) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது வரை இவர்கள் 150க்கும் மேற்பட்ட மக்களை மீட்டும், 250 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியக் கடற்படையிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய டோர்னியர் விமானம், ALH ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்திய ராணுவம்: தொடர் கனமழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தமிழ்நாடு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெள்ள சீரமைப்பில் ஈடுபட்டு வந்தனர். இது மட்டுமின்றி வெள்ளப்பாதிப்புகள் அதிகரித்த நிலையில், தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய ராணுவத்தின் தக்ஷின் பாரத் பகுதியில் இருக்கும் 23 மராத்தா லைட் காலாட்படையினைக் கொண்ட HADR வரிசை வெள்ள மீட்புப்பணிகளுக்காக விரைந்தது.
இடைவிடாமல் பெய்த கனமழையில் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்திய ராணுவப் படையினர், தூத்துக்குடியில் நேற்று (டிச.18) 150க்கும் மேற்பட்டோரைப் பத்திரமாக மீட்டு வசவப்புரத்திலுள்ள முகாம்களில் தங்கவைத்தனர். இவர்களில் 3கைக்குழந்தைகளுடன், 19 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணியைப் பத்திரமாக மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, இந்த மீட்புப்படையினர் இன்று(டிச.19) மீட்புப்பணிக்காகக் கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்திருந்த ஸ்ரீ வைகுண்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சாலைகள் மற்றும் இதர பாதைகள் கடுமையாகச் சேதமடைந்ததால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேல், போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் போனது. அதனால் ராணுவப்படையாயினர் இரு குழுக்களாகப் பிரிந்து, தண்ணீர் தேங்கியிருந்த சாலைகளில் நடந்துச்சென்றனர்.
ஒரு குழு அருகிலிருந்த நானல்காடு பகுதியில் மீட்புப்பணியைத் தொடர்ந்த நிலையில், மற்றொருகுழு ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் 17மணிநேரமாக ரயிலில் சிக்கித்தவித்த பயணிகள் அனைவரையும் துரிதமாகச் செயல்பட்டு இன்று(டிச.19) பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், மற்றொரு குழு வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் மக்களை மீட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அந்தோனியார்புரத்தில் பாதிக்கப்பட்டோரை BAUT(Boat Assualt Universal Type) மூலம் மீட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் மற்றொரு பிரிவான மெட்ராஸ் ரெஜிமெண்ட் ஈடுபட்ட வருகிறது.
இந்தியக் கடலோர காவல்படை: தென்மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இந்தியக் கடலோர காவல்படை தனது கப்பல்கள், விமானங்கள் மூலம் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சிக்கிய 200 நபர்களை ஐசிஜி குழு இன்று மீட்டுள்ளனர்.
இந்திய வானிலை மையம் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் டிசம்பர் 18 தேதியில் இந்தியக் கடலோர காவல்படை தமிழகப் பகுதிகளில் சுஜய் என்கின்ற கப்பலை நிலைநிறுத்தியது. பின், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் இன்று மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிவாரண நடவடிக்கைகளுக்காக நிலைநிறுத்தியது.
16 பேரிடர் மீட்புக் குழுக்கள் ஆறு பேரிடர் மீட்புக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு படகுகள் மற்றும் கயாக்ஸ் உதவிகளுடன் தெற்கு தூத்துக்குடி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியது.
தூத்துக்குடி அருகே கடலோர காவல்படை கப்பலிலிருந்து இயக்கப்படும் ஹெலிகாப்டர் தவிர, மதுரை விமான நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 01 டோர்னியர் மற்றும் 02 ALH Mk-III கொண்ட ICG விமானப் படைகளின் ஒரு பிரிவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவிகளை வழங்கத் தொடர் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
மேலும், தமிழக அரசால் வழங்கப்பட்ட சுமார் 600 கிலோவிற்கும் அதிகமான உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். மேலும், களத்தில் இறங்கிய மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய 200க்கும் மேற்பட்டவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். மக்களை முழுவதுமாக மீட்கும் வரை இந்தியக் கடலோரக் காவல்படை மீட்புக் குழு மீட்புப் பணிகளைச் செய்து கொண்டு இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இனிவரும் காலங்களில் மழையும், வறட்சியும் அதிகரிக்குமா - ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?