கரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா்களை மத்திய அரசு சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவருகிறது.
இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தச் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 30ஆம் தேதி வரை 254 மீட்பு விமானங்களில் 34,109 இந்தியா்கள் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனா்.
திருச்சி,மதுரை,கோவை விமானநிலையங்களுக்கு வந்த மீட்பு விமானங்கள் மூலம் வந்தவா்களையும் சோ்த்து மொத்தம் 73,116 இந்தியா்கள் மீட்கப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவருக்கும் விமானநிலையங்களிலேயே கரோனா மருத்துவப் பரிசோதணை நடத்தப்பட்டு 14 நாட்கள் அரசால் தனிமைப்படுத்தப்படுகின்றனா்.
இந்நிலையில், மத்திய அரசின் தளா்வுகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் திட்டத்தை இன்று முதல் அமுல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி குவைத்திலிருந்து இன்று அதிகாலை 3.40 மணிக்கு 134 இந்தியா்களுடன் ஏா்இந்தியா எகஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை மருத்துவ குழுவினா் சோதித்தனா். அவா்களில் ஏற்கனவே பரிசோதித்து மருத்துவ சான்றிதழ்களுடன் வந்தவா்களின் கைகளில் ரப்பா் ஸ்டாம்பு முத்திரையிட்டு வீடுகளில் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனா்.
சான்றிதழ்கள் இல்லாமல் வந்தவா்களுக்கு மட்டும் சென்னை விமானநிலையத்திலேயே இலவச கரோனா மருத்துவ பரிசோதணைகள் நடத்தினா். பின்பு அவா்கள் கைகளிலும் ரப்பா் ஸ்டாம்பு முத்திரைகள் போட்டு அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைத்தனா். அனைவருக்கும் சென்னை சா்வதேச விமானநிலையத்திலேயே சிறப்பு கவுண்டா் அமைத்து இ-பாஸ்கள் அளிக்கப்படுகிறது.