சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 23ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 நாள்கள் ஆகியும் கரை திரும்பாததால் படகின் உரிமையாளர், அவர்களது உறவினர்கள் மீன்வளத் துறையிடம் புகாரளித்தனர்.
இதனையடுத்து காணாமல்போன மீனவர்களை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர் விசைப்படகு மீனவர்கள் உதவியுடனும் மேலும் மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வான் வழியாகவும், கடல் வழியாகவும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
வெகு நாள்கள் ஆகியும் காணாமல்போன மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களைச் சமாதானப்படுத்தி, காணாமல்போன மீனவர்களை மீட்பதாக உறுதியளித்தார். இந்நிலையில், 55 நாள்கள் கழித்து இன்று (செப்.14) அதிகாலை 3.30 மணிக்கு காணாமல்போன மீனவர்களில் ஒருவர் படகின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு மியான்மரில் இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மீன்வளத் துறை அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இது குறித்து காசிமேடு மீன்வளத் துறை இயக்குநர் வேலன் கூறியதாவது, "காணாமல்போன மீனவர்கள் மியான்மரில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மியான்மர் அரசிடம் பேசி அவர்களை தமிழ்நாடு திரும்புவதற்கான நடவடிக்கை மேற்கோண்டுவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன 10 மீனவர்கள் 55 நாள்களுக்குப் பிறகு அவர்களிடம் இருந்து வந்த தகவலையடுத்து உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: நீட் வேண்டாம்: நாடாளுமன்றத்தில் பதாகைகள் ஏந்தி திமுக எம்.பி.க்கள் போராட்டம்