சென்னை: உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அங்கு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த ஆயிரத்து 890 தமிழ்நாடு மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம், போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்கள், இங்கு காலியிடங்கள் உள்ள கல்லூரிகளில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
இதுகுறித்து, சென்னையிலுள்ள வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவன மேலாண்மை இயக்குநர் சுரேஷ்குமார் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக 20 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் நாடு திரும்பினர். அதில், சுமார் 2 ஆயிரம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள்.
இவர்கள் அனைவரும் மீண்டும் படிப்பை தொடரும் வகையில், மத்திய அரசு குழு அமைத்து, அதன் மேற்பார்வையில் சேர்க்கையை நடத்த வேண்டும். உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்பிற்கு கட்டணம் குறைவு. அதேபோல மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்.
அதேபோல ரஷ்யா, கிர்கிஷ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிப்பை தொடர முடியும். மாணவர்கள் விரும்பினால் வேறு கல்லூரிக்கு மாறிச் சென்று படிக்கலாம். இதற்கான நடவடிக்கை அரசு எடுத்தால் செலவு குறைவாக இருக்கும். ஏனென்றால், கிழக்கத்திய ஐரோப்பா நாடுகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது.
குறிப்பாக உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. தற்போது ஆன்லைன் மூலம் தொடர்ந்து படித்து வருகின்றனர். இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலும் சலுகை அளித்துள்ளனர்.
மருத்துவப் படிப்பில் உக்ரைன், ரஷ்யா, சீனா நாடுகள் முன்னிலையில் இருக்கிறது. இங்கு வந்துள்ள மாணவர்கள் எங்கு படிக்க வேணடும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் போரினால் தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் மேற்கொண்டு படிப்பினை தொடர்வது குறித்து ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். அங்கிருந்து மாணவர்களுக்கு எவ்விதம் கல்வி அளிப்பது என்பது குறித்து ஆலோசனை வந்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க: 'புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக இருக்கிறது' - அமைச்சர் எ.வ.வேலு