கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் சிறப்பு ரயில்கள், பேருந்துகளை இயக்கி வருகிறது. அதைத்தொடர்ந்து தளர்வுகளின் அடிப்படையில் நிபந்தனைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் கட்டடப் பணிகள், சாலையோர விற்பனை உள்ளிட்ட பணிகளைச் செய்துவந்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். இப்படி தினமும் 2500 பேர் சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு நடந்து செல்வதால் தன்னார்வ அமைப்புகள், ஆந்திர அரசிடம் பேசி தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள தடா வரை ஆந்திர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசும் ஆந்திர தொழிலாளர்களுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தடா எல்லை வரை சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி இயக்கப்பட்டால் சென்னையிலிருக்கும் ஆந்திர தொழிலாளர்கள் தடா வரை சென்று அங்கிருந்து சொந்த மாவட்டங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூன் 1 முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுமா?