தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தலைமைச் செயலாளருக்கு 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ’’கரோனா நோய்த்தொற்று தீவிரமாகி வருகின்றது. இந்நிலையில், 9.5 லட்சம் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த உள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மற்றும் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில் ''50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நீரழிவு மற்றும் பல்வேறு இணை நோய் உள்ள ஆசிரியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடைகாலத்தை மற்றும் கரோனா சூழலை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும்.
கரோனா நோய் பரவல் தீவிரம் காரணமாக மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும், 10ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மே5ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென’’ தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு