தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் சார்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் செயலாளர் பழனிவேலு கூறியதாவது, "தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்.
பெண் ஆசிரியர்களுக்கு கழிப்பறை வசதி, உணவு இடைவேளை, தங்கும் வசதி மேலும் பெண் ஆசிரியருக்கு ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் தேர்தல் பணிகள் செய்ய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாகக் கொடுத்துள்ளோம். அதற்கு அவர் இது குறித்து தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்" எனத் தெரிவித்தார்.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் - புற்றுநோய், இதய நோய், சிறுநீரகக் கோளாறு நோய் போன்ற நோய் உள்ளவர்களுக்கு மனிதாபிமான முறையில் விலக்கு அளிக்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிட 100 விழுக்காடு அஞ்சல் வாக்குகளை வழங்கி உதவிட வேண்டும்.
விடுமுறை நாள்களைத் தவிர்த்து பிற நாள்களில் தேர்தல் வகுப்புகளை நடத்திட வேண்டும். பெண்களுக்கு அவர்களது இடங்களுக்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகளைச் செய்ய அனுமதி வழங்கியும், அனைத்துத் தேர்தல் பணிகளில் ஈடுபட வருகின்ற ஆசிரியர்களுக்கு உணவு, இதர அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் தங்களது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.