சென்னை: நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று (ஜன.26) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில், உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு பொறுப்பு சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார். பின்னர் உயர்நீதிமன்ற ஊழியர் எஸ்.கார்த்திக் என்பவர், தமிழ்நாட்டின் பராம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் சுற்றி காட்டினார்.
அதனைத்தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் பாதுகாவலர்கள், கண்களை கட்டிக் கொண்டு துப்பாக்கிகளை தனித்தனியாக பிரித்து, பின்னர் மீண்டும் ஒன்றாக்கும் சாகசத்தை செய்தனர். அதேபோல் ஆண் பாதுகாவலர்கள், ஆயுதங்களை ஏந்தி எதிரிகளை தாக்கும் முறைகள் குறித்து செய்து காண்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்கள், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 74th republic day: தமிழ்நாடு அரசு விருது பெற்றவர்கள் விபரம்